Saturday, August 23, 2014

இரா. நடராசனுக்கு பால சாகித்ய விருது; அபிலாஷுக்கு யுவ புரஸ்கார்

Posted by  on August 24, 2014 | Edit in tamilspeak.com

prize
2014-ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறுவர் இலக்கியத்திற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பால சாகித்ய விருது, தமிழ் மொழிப் பிரிவில் விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் தொகுப்பிற்காக இரா.நடராசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதேபோல 35 வயதுக்குள்பட்ட இளம் படைப்பாளிகளுக்கான “யுவ புரஸ்கார்’ விருதுக்கு தமிழில் “கால்கள்’ நாவலை எழுதிய ஆர். அபிலாஷ் சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சாகித்ய அகாதெமியின் செயலாளர் கே. ஸ்ரீனிவாச ராவ் கூறியதாவது: இந்த ஆண்டிற்கான பால சாகித்ய விருதுகளுக்கு 7 சிறுவர் கதைகள், ஆறு கவிதைகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு கட்டுரை ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுவர் இலக்கியங்களுக்கு பங்களிப்பு செய்த 8 எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விருதுக்கு தேர்வானோர் விவரம்: தினேஷ் சந்திர கோஸ்வாமி (அஸ்ஸாமி), கெளரி தரம்பால் (வங்கம்), கெளசல்யா பிரம்மா (போடோ), தியான் சிங் (டோக்ரி), சுபத்ரா சென் குப்தா (ஆங்கிலம்), ஈஷ்வர் பரமார் (குஜராத்தி), தினேஷ் சமோலா ஷைலேஷ் (ஹிந்தி), ஆனந்த் வி. படேல் (கன்னடம்), ஹமீது சிராஜ் (கஷ்மீரி), சூர்யா அசோக் (கொங்கணி), ஜீவகாந்த் (மைத்திலி), கே.வி. ராமநாதன் (மலையாளம்), ராஜ்குமார் பூபோன்சனா (மணிப்புரி), மாதுரி புரேந்தரே (மராத்தி), முன்னி சப்கோடா (நேபாளி), தாஸ் பெனூர் ஏ. ஜித்தேந்தர் (எ) நாராயண் தாஸ் (ஒடியா), குல்பீர் சிங் சூரி (பஞ்சாபி), நீரஜ் தஹியா (ராஜஸ்தானி), கன்ஹாய்லால் துடு (சந்தாலி), வாசுதேவ் சிந்து பாரதி (சிந்தி), இரா. நடராசன் (தமிழ்), தஸ்ரி வெங்கட்ரமணா (தெலுங்கு), மஹபூப் ரஹி (உருது) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு சம்ஸ்கிருத மொழி விருது அறிவிக்கப்படவில்லை. தாமிரப் பட்டயம், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை அடங்கிய பால சாகித்ய விருது பெங்களூரில் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படும் என்றார் அவர்.
“யுவ புரஸ்கார்’ விருது: 35 வயதுக்குள்பட்ட இளம் படைப்பாளிகளுக்கான “யுவ புரஸ்கார்’ விருதுக்கு 13 கவிதை நூல்கள், 3 நாவலகள், 4 சிறுகதைகள், ஒரு கட்டுரை ஆகியவற்றை படைத்த 21 இளம் படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழில் “கால்கள்’ நாவலை எழுதிய ஆர். அபிலாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விருது பெறுவோர் விவரம்: மணிகா தேவி (அஸ்ஸாமி), அபிமன்யூ மஹதோ (வங்காளி), சாந்தி பசுமத்தாரி (போடோ), கெளசிக் பரூவா (ஆங்கிலம்), அனில் சாவ்தா (குஜராத்தி), குமார் அனுபம் (ஹிந்தி), காவ்யா கதமே (கன்னடம்), நரேஷ் சந்திர நாயக் (கொங்கணி), பிரவீண் காஷ்யப் (மைத்திலி), இந்து மேனன் (மலையாளம்), வங்க்தோய் குமன் (மணிப்புரி), அவதூத் தொங்க்ரே (மராத்தி), தீகா பாய் (நேபாளி), நரேந்திர குமார் போய் (ஒடியா), கங்கண் தீப் சர்மா (பஞ்சாபி), ராஜு ராம் பிஜர்னியா (ராஜஸ்தானி), பராம்பா ஸ்ரீ யோக்மாயா (சம்ஸ்கிருதம்), அன்பா மராண்டி (சந்தெளலி), ஆர். அபிலாஷ் (தமிழ்), அப்பிரெட்டி ஹரிநாத் ரெட்டி (தெலுங்கு), இல்தேஃபாத் அம்ஜதி (உருது) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
டோக்ரி, கஷ்மீரி மொழிகள் பிரிவில் இந்த ஆண்டு விருதுக்கு தேர்வாகவில்லை. சிந்தி மொழிக்கு அளிக்கப்படும் விருது பின்னர் அறிவிக்கப்படும். தாமிரப் பட்டயம், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை அடங்கிய இந்த விருது வழங்கப்படும் தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர். அபிலாஷ் சந்திரன்: கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். “கால்கள்’ நாவல் 2012, ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
கடலூர் பள்ளித் தலைமை ஆசிரியர்
விருதுக்குத் தேர்வாகியுள்ள இரா.நடராசன், கடலூரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக புத்தகங்களுக்காக வெளிவரும் புத்தகம் பேசுது மாத இதழின் ஆசிரியராக உள்ளார். தமிழில் சிறுகதை. நாவல். மொழிபெயர்ப்பு அறிவியல் நூல்கள் குறிப்பாக சிறுவர் இலக்கியம் படைத்து வருகிறார்.
2008-ஆம் ஆண்டு மத்திய அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இவருக்கு கிடைத்தது. கற்பித்தலில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய இவரது, “ஆயிஷா’ என்ற குறுநாவல் ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்தது. இந்நாவல் 8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 1982-ல் இவரது முதல் கவிதை தொகுதி வெளியானது. 1991-ல் இவரது முதல் சிறுகதை கணையாழியில் வெளியானது. இதுவரை சிறுவர் நாவல்கள் உட்பட ஆறு நாவல்கள், நான்கு சிறுகதை தொகுதிகள், மூன்று கவிதை நூல்கள், அறிவியல் புனைக்கதை நாடகங்கள், மொழி பெயர்ப்பு நாவல்கள், பன்மொழி சிறுகதை தொகுதிகள், இலக்கிய ஆய்வு நூல்கள் உட்பட 46 நூல்கள் வெளிவந்துள்ளன.
இவரது “பூஜ்ஜியமாம் ஆண்டு’ நாவல் பார்வையற்றவர்கள் படிக்க வசதியாக பிரைல் மொழியில் வந்துள்ளது. “கணிதத்தின் கதை’ நூலுக்காக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்றுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக சிறுவர் இலக்கியப் படைப்பாளியாக இயங்கி வரும் நடராசனின் நான்கு கதைகள், குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டு சர்வதேச திரைவிழாக்களில் விருதுகளை வென்றுள்ளன.
பத்மநாபபுரம் எழுத்தாளர்
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தைச் சேர்ந்த அபிலாஷ் சந்திரன், தக்கலையில் பள்ளிப் படிப்பையும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலைப் படிப்பையும் முடித்தார். எம்.பில். படிப்பை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்த இவர், பிஹெச்.டி. படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டிருக்கிறார். ஆங்கில இலக்கியம் பயின்றவரான அபிலாஷ் சந்திரன், தமிழ் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இவர் சிறுவயது முதலே கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் எழுதி வருகிறார். இவர் எழுதிய 5 நூல்கள் வெளிவந்துள்ளன. சிற்றிதழ்கள், இணையதளம் உள்ளிட்டவற்றில் எழுதி வரும் இவர், தொலைக்காட்சிகளில் விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார்.
நன்றி : தினமணி

No comments:

Post a Comment